ஈரோடு மாவட்டத்தில் பவானி, அந்தியூர்,நம்பியூர், பெருந்துறை, புளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மானவாரி நிலங்கள் அதிக அளவில் உள்ளன. மழையை மட்டும் நம்பி உள்ள மானவாரி நிலங்களில் கடலை, சோளம், தட்டைப்பயறு, பாசிப்பயறு உள்ளிட்டவைகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆடி பட்டத்தை ஒட்டி கடலை விதைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. அவ்வப்போது பெய்த மழையின் காரணமாக செடிகள் நன்கு வளர்ந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் நிலவி வருவதாலும் மழை பொழிவு இல்லாததாலும் மானாவாரி நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த கடலை செடிகள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக , கடலைச் செடிகள் அதிகம் பயிரிடப்பட்டுள்ள அந்தியூர், பருவாச்சி செம்புளிச்சாம் பாளையம், இரட்டை கரடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் நிலவி வருவதால் கடலை செடிகள் கருகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து அந்தியூர் பகுதி மானாவாரி விவசாயிகள் தரப்பில் கூறுகையில், ” எங்கள் பகுதியில் ஆடிப்பட்டத்தின் போது கடலை செடிகள் பயிரிடப்பட்டுள்ளன. தற்போது பூக்கள் பூக்கும் பருவமாகும். ஆனால் மழை இல்லாததோடு வெயில் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. இதனால் செடிகள் மெல்ல கருகத் தொடங்கி உள்ளது. தொடர்ந்து வெயில் தாக்கம் இதே நிலை நீடித்தால் செடிகள் முற்றிலும் கருகி நஷ்டத்தை ஏற்படுத்தி விடும். இதைப்போல் சோளப் பயிர்களும் மழை இல்லாததால் பாதிக்கப்பட்டு வருகிறது” என்று கவலையுடன் தெரிவித்துள்ளனர்.
கடும் வெயிலால் கருகும் கடலைச் செடிகள் : விவசாயிகள் கவலை
Shares: