நம்மூர்

ஈரோடு ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம்: ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு

தீபாவளி பண்டிகையையொட்டி, ஈரோட்டில் இருந்து ரயில்களில் வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் ஈரோடு ரயில் நிலையத்தில் குவிந்துள்ளனர். இதையடுத்து ஈரோடு ரயில்வே போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி ரயில் நிலையத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். குறிப்பாக பயணிகளின் உடைமைகளை தீவிர பரிசோதனை செய்து அதன் பிறகு உள்ளே அனுமதித்து வருகின்றனர். அத்துடன், ரயில் பயணத்தின் போது பட்டாசுகள் ஏதும் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதன்படி, ஈரோடு ரயில் நிலையத்திற்கு வந்தடையும் ரயில்களின் ஒவ்வொரு பெட்டியாக ஈரோடு ரயில்வே போலீசார் சென்று பயணிகளின் உடைமைகளை தீவிர சோதனை செய்கின்றனர். அப்போது பயணிகளிடம், ரயில் பயணத்தின் போது பட்டாசுகள் மற்றும் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது என்றும் பயணிகள் முன் பின் அறிமுகம் இல்லாத நபர்கள் கொடுக்கும் உணவுகளை வாங்கி சாப்பிடக்கூடாது எனவும், ரயிலில் பயணம் செய்யும் பெண்கள் அதிக அளவில் நகைகளை அணிந்து செல்லக்கூடாது என்றும், இரவு நேரத்தில் ஜன்னலோரம் படுத்து தூங்க கூடாது என்றும் அறிவுறுத்துகின்றனர். இதேபோல் ஈரோடு ரயில் நிலைய நுழைவு பகுதியிலும் பயணிகள் உடைமைகளை போலீசார் தீவிரமாக சோதனை செய்து கண்காணித்து வருகின்றனர்