நம்மூர்

ஈரோட்டில், சாலை ஆக்கிரமிப்புகளைநாளை முதல் அகற்ற முடிவு

ஈரோட்டில் பிரதான சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை நாளை ( செப்.20) முதல் அகற்ற ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பிரதான சாலைகள் மற்றும் வாகனப் போக்குவரத்து அதிகமுள்ள சாலைகளிலும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் ஈரோட்டில் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளர் மனிஷ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், நாளை (செப்.20) முதல் மீனாட்சி சுந்தரனார் சாலை ( ஜி.ஹெச் ரவுண்டானா முதல் பி.எஸ்.பார்க் வரை), பி.எஸ்.பார்க் முதல் மணிக்கூண்டு, எல்லை மாரியம்மன் கோவில் வரை, ஸ்வாஸ்திக் கார்னர் முதல் வீரப்பன்சத்திரம் வரை, ஈ.வி.என் ரோடு ( ஜி.ஹெச் ரவுண்டானா முதல் ரயில்வே ஸ்டேஷன், காளைமாடு சிலை வரை) ஆர்.கே.வி ரோடு, சத்தி ரோடு ஆகிய பிரதான சாலைகளில் தற்போதுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றுவதென்றும் அதில் முதற்கட்டமாக, பி.எஸ்.பார்க் முதல் எல்லை மாரியம்மன் கோவில் வரை உள்ள சாலை ஆக்கிரமிப்புகளை நாளை காலை 9 மணியளவில் அகற்றுவதென்றும் முடிவு செய்யப்பட்டது. அத்துடன், பிரதான சாலைகளின் இருபுறமும் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவது தடை செய்யப்பட்டு, அதற்கென மாநகராட்சி இடத்தில் உள்ள வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நிறுத்த ஏற்பாடு செய்யவும் முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில், மாநகராட்சி நிர்வாகம், காவல்துறை, போக்குவரத்து காவல்துறை, தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.