ஈரோட்டில் நோய் பரப்பும் மையமாக பேபி கால்வாய் மாறி வருவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
ஈரோடு காலிங்கராயன் வாய்க்காலில் சாய, தோல் ஆலை கழிவுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளின் கழிவுகள் கலப்பதை தடுக்க, சுமார் ரூ.75 கோடி மதிப்பீட்டில் சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்துக்கு, துணை கால்வாயாக பேபி கால்வாய் கட்டப்பட்டுள்ளது.
இந்த பேபி கால்வாயில் கழிவுகளை ஓடவிட்டு, அதை சுத்திகரிப்பு செய்து தூய்மையான தண்ணீரை காவிரியில் கலப்பது இந்த திட்டத்தின் நோக்கமாகும். ஆனால், வெறுமனே கால்வாய் மட்டும் அப்போது பொதுப்பணித்துறை மூலம் அமைக்கப்பட்டது.
தற்போது இந்த திட்டம் பொதுமக்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் திட்டமாக மாறி உள்ளது. ஈரோடு மாநகராட்சியில் இருந்து வெளியேறும் கழிவுகளில் அதிக அளவு பேபி கால்வாய்க்கு செல்கிறது. ஆனால், அது அங்கேயே தேங்கி மிகவும் துர்நாற்றம் வீசும் சாக்கடையாக மாறி இருக்கிறது. மேலும் பிளாஸ்டிக் குப்பைகள், கழிவுகள் குவிந்து கிடக்கின்றன.
கொசு உற்பத்தி, நோய்கள் பரப்பும் ஓர் மையமாகவே இது மாறி விட்டது. இதனால் வாய்க்காலை ஒட்டி குடியிருக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இது தொடர்பாக, மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இப்பிரச்சினையில், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் பரவாமல் தடுக்கும் வகையில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதுகுறித்து, மாநகராட்சி 1வது மண்டல தலைவர் பழனிசாமி கூறுகையில்,
” பேபி கால்வாய் தூர்வாரப்பட வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தேன். அதன் அடிப்படையில், ஆணையாளர் மனிஷ் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வந்து சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டனர். விரைவில் இச்சிக்கலுக்கு தீர்வு காணப்படும் என அவர்கள் கூறியிருக்கின்றனர்” என தெரிவித்தார்.
++++
கால்வாயா…? நோய் பரப்பும் மையமா…?
Shares: